கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை

ஷென்சென்: உலகளாவிய கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள சீனா, அதன் தாக்கத்தை உணர்ந்து நாய், பூனை இறைச்சிகளுக்கு தடை விதித்துள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் துவங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைக்கிறது. உலக அளவில் கொரோனா தொற்றால் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, அதில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ், வனவிலங்குளை உண்பது மூலமாக தான் முதலில் பரவியதாக கூறப்படுகிறது. ஆனால் அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில், சீனாவில் வைரஸ் தொற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. அதன் காரணமாக நாய், பூனை இறைச்சிகள் விற்பனை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரமான ஷென்சென்னில் வனவிலங்கு வர்த்தக கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிடத் தடை விதித்துள்ளது. இந்த தடை மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. செல்லப்பிராணிகளை உட்கொள்வதை வளர்ந்த பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், தைவான், ஹாங்காங் போன்ற பகுதிகளில் கூட தடை செய்யப்பட்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டு, இந்த தடை உத்தரவினை அரசு நேற்று (ஏப்.,1) வெளியிட்டிருந்தது.